ஒரு காலத்தில் இந்த கிராமம் பசுமையாக இருந்ததாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். "நாங்கள் இயற்கையுடன் வாழ்ந்துள்ளோம், அதிலிருந்து எங்கள் தேவைகளை எப்போதும் பூர்த்தி செய்துள்ளோம்", என்று ஒரு குறு விவசாயியான, பழங்குடியின மூப்பர் அட்யா மோட்டா கூறுகிறார். "ஆனால் பஜாரியா (நவீன மனிதர்கள்) இங்கு வந்த பிறகு காடு தரிசாகிவிட்டது, நாங்கள் சந்தையைச் சார்ந்திருக்க தொடங்கிவிட்டோம்."
62 வீடுகளைக் கொண்ட இக்கிராமத்தில், வாழும் 312 பில்களில் அத்யா மோட்டாவும் ஒருவர். குஜராத்தின் நகரங்களில் தொழில்துறை மற்றும் பிற நலன்களுக்காக கண்மூடித்தனமாக மரம் வெட்டியதால் அவர்களின் காடுகள் அழிக்கப்பட்டன.
ஜல்சிந்தி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பழங்குடியின பெரியவரான பாவா மகாரியா கூறுகையில், "நாங்கள் எப்போதும் வனத்தைப் பாதுகாத்து, எங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தினோம். காடுகளை நாங்கள் ஒருபோதும் சுரண்டவில்லை. ஏனெனில் அவை எங்களின் ஒரே வாழ்விடமாகவும், வாழ்க்கையாகவும் உள்ளது.“
பில்கள் நீண்ட காலமாக வன நிலங்களை பயிரிட்டு வந்தனர். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை 1957-ம் ஆண்டிற்குப் பிறகு மாநில வனத்துறையால் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது இந்த பகுதிகள் 'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக' மாறின.
இந்திய வனச் சட்டம் (1927), விவசாயிகளின் பகுதி பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்படும்போது அவர்களின் நில உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்கான சட்ட செயல்முறையை வழங்குகிறது. இருப்பினும், இந்த சட்டங்கள் குறித்த பழங்குடிகளின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்ட வனத்துறையினர், அவர்களின் நிலத்தை ஏமாற்றினர். இதன் விளைவாக, பல பில்கள் தங்கள் மூதாதையர் நிலங்களில் விவசாயம் செய்ய முடியவில்லை.
1987-ம் ஆண்டில், கெதுட் மஸ்தூர் சேத்னா சங்கத்தை உருவாக்கினர் - அட்யா மோட்டாவும் அதில் ஒரு உறுப்பினர் - தங்கள் உரிமைகளுக்கு போராடுவதற்காக, மீண்டும் பயிரிடத் தொடங்குவதற்காக அது அமைக்கப்பட்டது. இது ஒரு நீண்ட போராட்டத்திற்கு வழிவகுத்தது. 2006-ம் ஆண்டில் வன உரிமைச் சட்டத்தை இயற்ற அது பங்களித்தது. 2008-ம் ஆண்டு முதல், மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பல ஆயிரம் பழங்குடியின குடும்பங்கள் இந்த போராட்டத்தின் விளைவாக தங்கள் முன்னோர்களின் வன நிலங்களுக்கு உரிமைகளைப் பெற்றுள்ளன.


இடது: மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோட்டா அம்பா கிராமம் (வருவாய் ஆவணங்களில் அம்பா சோட்டா என்று அழைக்கப்படுகிறது). வலது: புஜாரா கி சவுக்கி கிராமத்தில் உள்ள அடர்ந்த காடுகளின் பரந்த காட்சி, இன்னும் பசுமையைக் கொண்ட ஒரு சில கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். முன்புறம் உர்சியா புனியா என்ற பில் விவசாயிக்கு சொந்தமான பண்ணை உள்ளது


இடது: அத்தா கிராமத்தில் ஒரு பழங்குடி குடும்பம் சோளப் பயிரிலிருந்து சோளத்தை பிரிக்கிறது. சோளம், சிறுதானியங்கள் மற்றும் மக்காச்சோளம் ஆகியவை இப்பகுதியில் பழங்குடிகள் பயிரிடும் முக்கிய தானிய பயிர்களாகும். அதில் கிடைக்கும விளைச்சல் அவர்களின் ஓராண்டு சொந்த நுகர்வுக்கு போதுமானது; அவர்கள் அதில் எதையும் விற்பதில்லை. வலது: அத்தாவில் ஒரு பழங்குடியின விவசாயி தனது செழுமையான கம்பு பயிர்களுக்கு நடுவே நிற்கிறார். கால்நடை எருவை மட்டுமே பயன்படுத்தி வளர்க்கப்படுவதால், இங்குள்ள சம்பாப் பயிர்கள் அதிக விளைச்சலை தருகின்றன. ஆனால் நிலத்தின் பரப்பளவு மிகவும் சிறிதாக இருப்பதால், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் உணவளிக்க விளைச்சல் போதுமானதாக இல்லை

ஒரு மரத்தில் சாக்கு மூட்டைகளில் தற்போதைய பயிரிலிருந்து விதைகளை பழங்குடியினர் சேமிக்கிறார்கள். அவர்கள் அடுத்த ஆண்டு விதைக்க இந்த விதைகளைப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக சந்தையில் இருந்து எதையும் அவர்கள் வாங்குவதில்லை


இடது: பில்களுக்கு கால்நடைகள் ஒரு முக்கிய மூலதன ஆதாரமாகும். வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விலங்குகளைப் பராமரிப்பதில் பங்களிக்கிறார்கள். ஆனால், காடுகள் அழிக்கப்பட்ட மலைப்பகுதியில் தீவன பற்றாக்குறையால், அதிகளவு பால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வலது: இங்கு அத்தா கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இணைந்து கற்களால் ஆன பண்ணைக் கரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பில் சமூகத்தினர் கூலியை சேமிக்க ஒருவருக்கொருவர் வயல்களில் வேலை செய்கிறார்கள். இந்த வழக்கம் 'தாஸ்' என்று அழைக்கப்படுகிறது

புஜாரா கி சவுக்கியில் உள்ள கிராமவாசிகள் மண்ணால் கூரை ஓடுகளை உருவாக்குகிறார்கள், அதை அவர்கள் மேம்படுத்தப்பட்ட சூளையில் சுடுவார்கள். பில்கள் தங்கள் வீடு மற்றும் விவசாயத் தேவைகள் பலவற்றிற்கு தன்னிறைவு பெற்றுள்ளனர்


இடது: அலிராஜ்பூரில் உள்ள வால்பூர் கிராமத்தில் ஹாட் (வாரச்சந்தையில்) தங்கள் பண்ணைகளில் விளைந்த சக்கரவல்லிக் கிழங்கை விற்கும் பெண்கள். சோளம், கம்பு, மக்காச்சோளம், எள், நிலக்கடலை, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட உள்ளூர் விளைபொருட்களை கணிசமான அளவு பழங்குடியினர் விற்பனை செய்கின்றனர். உப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், சோப்பு, கலப்பை, கோடாரி போன்ற தங்கள் வீட்டு மற்றும் விவசாயப் பொருட்களையும் இங்கு வாங்குகின்றனர். வலது: பில் வீட்டு சமையலறை. நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்து பாதுகாக்க பாத்திரங்கள் மரக்கட்டை அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன


இடது: ஆகடியா கிராமத்தில் மக்காச்சோளம் மாவில் ரொட்டி தயாரிக்கும் பெண். மக்காச்சோளம் மற்றும் சோளம் ஆகியவை இவர்களின் பிரதான உணவு. கோதுமை அல்ல. ஆனால் பொதுவாக இந்தியாவின் பிற இடங்களில் கோதுமை ரொட்டி தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் சந்தையில் இருந்து பிற தானியங்களை அரிதாகவே வாங்க முடியும். வலது: அத்தா கிராமத்தில், 6 வயதான அமாஷியா புட்லா மற்றும் அவரது சிறிய சகோதரி ரெட்லி ஆகியோர் முந்தைய நாள் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளை சாப்பிட்டனர். பெரும்பாலான கிராமவாசிகள் மறுநாள் காலையில் சமையல் எண்ணெயில், தட்டிய சிவப்பு மிளகாயை வதக்கி மீதமுள்ள ரொட்டிகளை சேர்த்து சாப்பிடுகிறார்கள்


இடது: சிலக்டா கிராமத்தில் உள்ள ஒரு பனை மரத்தில் மோட்லா துனா. இதை பில்கள் 'தாட்' என்று அழைக்கிறார்கள். அவர் கிளைகளை உரித்து 'தாடி' என்ற திரவத்தை எடுக்கிறார். தாடி தயாரிக்க, கிராமங்களில் பனையில் வடியும் திரவத்தை சேகரிக்க பூச்செடிகளைச் சுற்றி குடங்களை (மரத்தின் மொட்டுகள்) தொங்க விடுகின்றனர். இது மாலையில் செய்யப்படுகிறது. இரவில் குடங்கள் நிரம்புகின்றன. அதிகாலையில், இது ஒரு இனிப்பு சாறு போல சுவையாக இருக்கும். ஆனால் சூரிய ஒளி பட்டால், தாடி புளித்து ஒரு மது பானமாக மாறும். வலது: உம்ராலி என்ற சந்தை கிராமத்தில் புளித்த தாடி விற்கும் பெண்கள். இந்த பான விற்பனை முக்கிய வருமான ஆதாரமாக மாறியுள்ளது. பருவ காலத்தில், நல்ல நாட்களில் (இது நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும்), அவர்கள் ஒவ்வொருவரும் லிட்டர் ரூ.30 என ஒரு நாளைக்கு 20 லிட்டர் வரை விற்க முடியும். சாறு குறைந்து அவற்றின் விநியோகம் குறையும்போது வருமானமும் குறைகிறது

வைகல்கான் சோட்டி கிராமத்தில் உள்ள ஒரு தும்ரியில் இருந்து இந்தர்சியா சேனா என்பவர் தாடி குடிக்கிறார். தும்ரி என்பது உள்ளூர் சுரைக்காயின் உலர்ந்த மற்றும் வெற்று தோல் ஆகும்

கைபேசியை கம்பத்தில் தொங்கவிட்டு பயன்படுத்தும் பழங்குடி ஒருவர். கோடம்பா கிராமத்திலும், இங்குள்ள பல கிராமங்களிலும் மொபைல் நெட்வொர்க்குகள் குறைவாகவே உள்ளன. வேலை நிமித்தமாக குஜராத்துக்கு குடிபெயர்ந்த குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்க இவர்களுக்கு கைபேசிகள் அவசியம்

பில் சமூகத்தின் பல ஆண்களும், பெண்களும் குஜராத்தில் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அலிராஜ்பூரில் போதுமான வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாததால் 85% பழங்குடி குடும்பங்கள் (கெடுட் மஸ்தூர் சேத்னா சங்கம் நடத்திய கணக்கெடுப்பின்படி) பருவகால அடிப்படையில் குஜராத் நகரங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன - ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளிலிருந்து இப்போது தடைசெய்யப்பட்ட நவீன கான்கிரீட் காடுகளுக்கான மகிழ்ச்சியற்ற மாற்றம்

ஜல்சிந்தி கிராமத்தில் உயர்த்தப்பட்டுள்ள ஒரு பண்ணை. 1998-ம் ஆண்டில் சர்தார் சரோவர் அணை கட்டப்பட்ட பின்னர் நர்மதா ஆற்றின் வளமான பள்ளத்தாக்கில் அமைந்திருந்த நிலம், நீரில் மூழ்கியபோது அந்த பண்ணையை உயர்த்த வேண்டியிருந்தது. இது பல கிராமங்களையும், கிராமவாசிகளையும் இடம்பெயரச் செய்தது

அலிராஜ்பூரின் மலைகளின் குறுக்கே பாயும் நர்மதை ஆறு

அகடியாவில் மீன் வலையை வெளியே இழுக்கும் பழங்குடி ஒருவர். நர்மதை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பெரும்பாலான கிராமவாசிகள் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்

சர்தார் சரோவர் நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தங்கள் வயல்களில் எஞ்சி நிற்கும் ஒரு மரத்தின் அருகே விளையாடும் குழந்தைகள்

சர்தார் சரோவர் நீர்த்தேக்கத்தை சுற்றி திருமண கொண்டாட்டத்திற்கு ஆடை அணிந்தபடி பெண்கள்


இடது: திருமணம் என்பது கொண்டாட்டத்திற்கான ஒரு சந்தர்ப்பம், இளம் மணமகன் தனது நடனமாடும் உறவினரின் தோளில் தூக்கி வைக்கப்பட்டுள்ளார். வலது: திருமணத்திற்கு தயாராக பாரம்பரிய வெள்ளி நகைகளை அணிந்த ஒரு பழங்குடியின மணமகள்


இடது: ஒரு புட்லியா, ஆடம்பரமான உடையில் ஜொலிக்கிறார் - இது மார்ச் மாதத்தில் ஹோலி பண்டிகைக்குப் பிறகு நிகழ்த்தப்படும் கோத் என்ற குழு நடனத்தில் ஒரு கதாபாத்திரம். வலது: வசந்த காலத்தில் ஹோலிக்கு சற்று முன்பு சம்பா அறுவடையைக் கொண்டாடும் வண்ணமயமான பகோரியா திருவிழாவின் போது பகாத்கர் கிராமத்தில் பழங்குடிகள் நடனமாடுகிறார்கள்
இந்த கட்டுரைக்கான சில புகைப்படங்களை கெடுட் மஸ்தூர் சேத்னா சங்கத்தின் உறுப்பினர் மகன் சிங் காலேஷ் எடுத்தார்.
தமிழில்: சவிதா