தெற்கு மும்பையின் புலேஷ்வரிலுள்ள குழப்பமான குறுக்குச் சந்துகளின் ஆழத்தில் மன்சூர் ஆலம் ஷேக் அனுதினமும் அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு செல்ல எழுந்து விடுகிறார். மெலிவாக, எப்போதும் லுங்கியில் காணப்படும் அவர், 550 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாடகை உலோக வண்டியை கோவாஸ்ஜி படேல் டேங்கில் நீர் நிரப்பத் தள்ளிச் செல்கிறார். அவரின் வசிப்பிடத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அப்பகுதி. அவர் மிர்சா காலிப் மார்க்கெட்டுக்கு அருகே துத் பஜாரில் இருக்கும் பொதுக் கழிப்பறையின் மூலையில் திறந்த வெளியில் வசிக்கிறார். வண்டியுடன் துத் பஜாருக்கு மீண்டும் வருகிறார். ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து வண்டியை நிறுத்துகிறார். கடைகளிலும் அருகாமை வீடுகளிலும் இருக்கும் அவரின் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று கொடுக்கத் தொடங்குகிறார்.
50 வயது மன்சூர் இறுதியாக மிஞ்சியிருக்கும் பிஷ்டிகளில் ஒருவர். அந்த வேலையைப் பார்த்துதான் அவருக்கான வாழ்வாதாரத்தைப் பெறுகிறார். மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சுத்தப்படுத்தவும் கழுவதும் துவைக்கவும் குடிக்கவும் முப்பது ஆண்டுகளாக அவர் நீர் விநியோகித்துக் கொண்டிருக்கிறார். கோவிட் தொற்று பிஷ்டிகளின் தொழிலை பாதிக்கும்வரை, 30 லிட்டர் நீரைச் சுமக்கக் கூடிய மஷாக் என்னும் தோல்பையில் புலேஷ்வரில் நீர் விநியோகித்த சில மஷாக்வாலாக்களில் மன்சூரும் ஒருவர்.
ஆனால் மஷாக்கில் நீர் விநியோகிக்கும் பாரம்பரியம் ”இப்போது செத்துப் போய்விட்டது” என்கிறார் 2021ம் ஆண்டில் பிளாஸ்டிக் பக்கெட்டுகளுக்கு மாறிவிட்ட மன்சூர். “பழைய பிஷ்டிகள் மீண்டும் அவர்களது கிராமத்துக்கு திரும்ப வேண்டும். இளைய பிஷ்டிகள் புதிய வேலைகள் தேட வேண்டும்,” என்கிறார் அவர். வட இந்தியாவின் இஸ்லாமியச் சமூகமான பிஷ்டியின் பாரம்பரியத் தொழிலின் மிச்சம்தான் ‘பிஷ்டிகள்’ வேலை. பாரசீக மூலத்தைக் கொண்ட ‘பிஷ்டி’ என்கிற வார்த்தைக்கு ‘நீர் சுமப்பவர்’ என அர்த்தம். அச்சமூகத்துக்கு சக்கா என்கிற பெயரும் உண்டு. அரபி வார்த்தையான சக்காவுக்கு ‘நீர் சுமப்பவர்’ அல்லது ‘கோப்பை கொண்டவர்’ என அர்த்தம். ராஜஸ்தான், உத்தரப்பிரதேஷம், ஹரியானா, தில்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் (இங்கு இச்சமூகத்துக்கு பெயர் பகாலி) ஆகிய இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிஷ்டிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

தெற்கு மும்பையின் புலேஷ்வர் பகுதியிலுள்ள சிபி டேங்க்
பகுதியில் நிரப்பப்பட்ட உலோக வண்டியைத் தள்ள மன்சூர் ஆலம் ஷேக்குக்கு (இளஞ்சிவப்பு
நிறச் சட்டையில்) உதவி தேவைப்படுகிறது. அவரது
மஷாக், வண்டிக்கு மேலே இருப்பதைப் பார்க்கலாம்
“நீர் விநியோகத் தொழிலை பிஷ்டிகள் ஆண்டு கொண்டிருந்தனர். அவர்கள் இந்த உலோக நீர் வண்டியை மும்பையில் பல இடங்களில் வைத்திருந்தார்கள்,” என்கிறார் மன்சூர். “8-லிருந்து 12 பேர் ஒவ்வொரு வண்டியிலும் நீர் எடுத்து விநியோகிப்பார்கள்.” வளமாக ஒரு காலத்தில் இருந்த பிஷ்டிகளின் தொழில் பழைய மும்பையில் சரியத் தொடங்கியதும், அவர்கள் பிற வாய்ப்புகள் தேட ஆரம்பித்தனர், என்கிறார் அவர். உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் ஆகியப் பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்கள் புலேஷ்வரில் அவர்களுக்கு மாற்றுகளாக மெல்ல ஆகத் தொடங்கினர்.
பிகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கச்ச் ரசுல்பூர் என்கிற கிராமத்திலிருந்து 1980களில் மும்பைக்கு வந்தவர் மன்சூர். இந்த வேலைக்கு வருவதற்கு முந்தைய தொடக்க மாதங்களில் அவர் வடா பாவ் உணவு வகையை விற்றுக் கொண்டிருந்தார். பிறப்பால் அவர் பிஷ்டி இல்லையெனினும், புலேஷ்வரின் பெந்தி பஜார் மற்றும் டோங்க்ரி பகுதிகளில் நீர் விநியோகிக்கும் வேலையை அவர் செய்யத் தொடங்கினார்.
“ராஜஸ்தானைச் சேர்ந்த பிஷ்டியான மும்தாஜ் என்னை வேலைக்கு வைத்து பயிற்சி கொடுத்தார்,” என்கிறார் மன்சூர். “அவரிடம் அச்சமயத்தில் நான்கு நீர் வண்டிகள் இருந்தன. ஒவ்வொரு வண்டியும் ஒவ்வொரு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு வண்டியிலிருந்தும் 7-8 பேர் மஷாக்குகளில் நீரை எடுத்துச் சென்று விநியோகித்தனர்.”

கோவிட் ஊரடங்குகளுக்குப் பிறகு மஷாக்கை விடுத்து நீர்
விநியோகிக்க பிளாஸ்டிக் பக்கெட்டுகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் மன்சூர்
மும்தாஜிடம் ஐந்து வருடங்கள் வேலை பார்த்தப் பின், மன்சூர் தனியாக வந்து அவர் சொந்தமாக நீர் வண்டியை வாடகைக்கு எடுக்கத் தொடங்கினார். “20 வருடங்களுக்கு முன் நிறைய வேலைகள் இருந்தன. இப்போது அதில் கால்வாசிதான் இருக்கிறது. நீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கத் தொடங்கியதும் எங்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது,” என்கிறார் மன்சூர். 1991ம் ஆண்டின் இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு பாட்டில்களில் நீர் விற்கும் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து புலேஷ்வரின் பிஷ்டிகளுக்கு கடும் வீழ்ச்சியைக் கொடுத்தது. குடுவை நீர் நுகர்வு 1999லிருந்து 2004ம் ஆண்டுக்குள் மும்மடங்காகி இருக்கிறது. குடுவை நீர் துறையின் மொத்த விற்பனை 2002ம் ஆண்டில் 1000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தாராளமயமாக்கல் பல விஷயங்களை மாற்றியது. சிறு கடைகளுக்கு பதில் வணிக வளாகங்கள் அறிமுகாகின. ஒண்டுக் குடித்தனக் குடியிருப்புகளுக்கு பதிலாக உயரமான கட்டிடங்கள் வந்தன. நீர் வண்டிகள் மோட்டார் பைப்பில் நீர் விநியோகிக்கும் பழக்கம் வந்தது. குடியிருப்புக் கட்டிடங்களுக்கான நீர்த் தேவை சரிந்தது. கடைகள், பட்டறைகள் போன்ற சிறு வணிக அமைப்புகள் மட்டும்தான் மஷாக்வாலாக்களை சார்ந்திருந்தன. “குடியிருப்புகளில் வாழ்ந்தவர்கள் நீர் வண்டிகளிலிருந்து நீரை வரவழைத்தனர். குடிநீர் குழாய்களையும் மக்கள் நிறுவிக் கொண்டனர். இப்போது, திருமண நிகழ்ச்சிகளில் குடுவை நீர் கொடுப்பது வழக்கமாகி இருக்கிறது. முன்பெல்லாம் நாங்கள்தான் அங்கு நீர் விநியோகித்தோம்,” என்கிறார் மன்சூர்.
தொற்றுக்காலத்துக்கு முன், மன்சூர் ஒவ்வொரு மஷாக் பைக்கும் (கிட்டத்தட்ட 30 லிட்டர்) 15 ரூபாய் சம்பாதித்தார். இப்போது 15 லிட்டர் பக்கெட் நீரை கொடுப்பதற்கு அவர் வெறும் 10 ரூபாய் வருமானம்தான் ஈட்டுகிறார். இப்போது அவர் நீர் வண்டிக்கு மாத வாடகை ரூ.170 கொடுக்கிறார். நீர் கிடைக்கும் இடத்தைப் பொறுத்து நாளொன்றுக்கு 50லிருந்து 80 ரூபாய் வரை வண்டி நிரப்பச் செலவு செய்கிறார். கிணறுகள் கொண்ட அப்பகுதியின் கோவில்களும் பள்ளிகளும் பிஷ்டிகளுக்கு நீர் விற்கின்றன. “முன்பெல்லாம் ஒவ்வொரு மாதமும் 10,000லிருந்து 15,000 ரூபாய் வரை எங்களால் சேமிக்க முடிந்தது. ஆனால் இப்போதெல்லாம் 4,00-5,000 ரூபாய் கையில் நிற்பதே அரிதாக இருக்கிறது,” என்கிறார் மன்சூர் வணிகம் முன்னும் இப்போதிருக்கும் நிலைகளை ஒப்பிட்டு.

நீர் விநியோகித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது
(டிசம்பர் 2020-ல்), வேறு ஆர்டர் எதுவும் இருக்கிறதா என செல்பேசியில் சரி பார்த்துக்
கொள்கிறார். தொடர் வாடிக்கையாளர்கள் அவருக்கு இருந்தனர். நாள்தோறும் 10-30 ஆர்டர்கள்
அவருக்குக் கிடைக்கும். சிலர் அவரை நேரே சந்தித்து ஆர்டர் கொடுப்பார்கள். பிறர் செல்பேசியில்
தொடர்பு கொண்டு நீர் விநியோகிக்கச் சொல்வார்கள்
அவரது வணிகப் பங்குதாரரான ஆலமும் பிகாரின் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்தான். ஆலமும் மன்சூரும் மாறி மாறி 3-6 மாதங்கள் மும்பையிலும் மிச்சத்தை கிராமத்தில் குடும்பங்களுடனும் கழித்தார்கள். சொந்த ஊரில் அவர்கள் சொந்த நிலத்தைப் பார்த்துக் கொள்வார்கள். அல்லது விவசாயக் கூலிகளாக பணிபுரிவார்கள்.
மார்ச் 2020-ல் அறிவிக்கப்பட்டு ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்ட தேசிய ஊரடங்கின்போது, மஷாக்வாலாக்களுக்கு புலேஷ்வரில் மிகக் குறைவான வாடிக்கையாளர்களே மிச்சமிருந்தனர். சிறு வணிக மையங்களில் பகலில் பணிபுரிந்து இரவில் நடைபாதையில் படுத்துக் கொள்பவர்கள் அவர்கள். பல கடைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் வீட்டுக்கு திரும்பினர். உணவுக்காக ஐந்து பேர் காத்திருக்கும் குடும்பத்தைக் கொண்ட மன்சூர் குடும்பத்துக்கு அனுப்பவென ஒன்றும் சம்பாதிக்க முடியவில்லை. 2021ம் ஆண்டில் தொடக்கத்தில் ஹஜி அலிப் பகுதியில் ஒரு மறுக்கட்டுமான தளத்தில் மேஸ்திரிக்கு உதவியாளராக பணிபுரிந்து 600 ரூபாய் நாட்கூலி ஈட்டினார்.
மார்ச் 2021-ல் மன்சூர் 200 ரூபாய் நாட்கூலிக்கு விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த அவரின் கிராமம் கச்ச் ரசுல்பூருக்குக் கிளம்பினார். அவர் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வீட்டின் பழுதுகளை நீக்கினார். நான்கு மாதங்கள் கழித்து, மும்பைக்கு திரும்பி, மஷாக்வாலா வேலையை மீண்டும் தொடங்கினார். இம்முறை நுல் பஜாரில் வேலை செய்தார். ஆனால் அவரின் தோல் பையை சரிபார்க்க வேண்டியிருந்தது. மஷாக் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தைக்கப்பட வேண்டும். எனவே மன்சூர் அதை சரிசெய்ய யூனுஸ் ஷேக்கிடம் சென்றார்.

ஜனவரி 2021-ல் மும்பையின் பெந்தி பஜார் பகுதியில் ஒரு
மஷாக்கை தைத்துக் கொண்டிருக்கும் யூனுஸ் ஷேக். அவர் சில மாதங்கள் கழித்து பஹ்ரய்ச்
மாவட்டத்திலிருந்து ஊருக்கு திரும்பி விட்டார்
60 வயதுகளில் இருக்கும் யூனுஸ், மஷாக்குகளை பெந்தி பஜாரில் தைத்து, வடிவமைத்து வாழ்க்கை ஓட்டினார். மார்ச் 2020-ன் ஊரடங்குக்கு நான்கு மாதங்கள் கழித்து, யூனுஸ் உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்திலிருந்த சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று விட்டார். அந்த வருடத்தின் டிசம்பர் மாதம் அவர் மும்பைக்கு திரும்பிய போது பெரிய அளவில் வேலை இருக்கவில்லை. வெறும் 10 அல்லது சற்று அதிக மஷாக்வாலாக்கள்தான் அப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்தனர். கோவிட் ஊரடங்குகளுக்குப் பிறகு அவரின் சேவைக்கு அவர்கள் குறைவாக பணம் கொடுக்க ஆரம்பித்தனர். பெரிய நம்பிக்கை ஏதுமின்றி யூனுஸ் பஹ்ரைச்சுக்கு 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் திரும்பினார். மீண்டும் வருவதில்லை என்கிற முடிவிலிருந்தார். மஷாக்குகளை தைப்பதற்கான சக்தியை இழந்துவிட்டதாக அவர் சொன்னார்.
35 வயது பாபு நய்யாரைப் பொறுத்தவரை மஷாக் சுமந்த நாட்களுக்கான முடிவுகாலமாக அது இருந்தது. “சரி செய்ய முடியாததால் அதைத் தூக்கி எறிந்து விட்டேன்.” அவர் இப்போது பெந்தி பஜாரில் இருக்கும் நவாப் ஆயாஸ் மஸ்ஜித்தைச் சுற்றியிருக்கும் கடைகளுக்கு நீரை பிளாஸ்டிக் கேனில் விநியோகிக்கிறார். “ஆறு மாதங்களுக்கு முன் வரை, மஷாக் பயன்படுத்து 5-6 பேர் இருந்தனர். அனைவரும் பக்கெட் அல்லது அலுமினியக் குடம் போன்றவற்றுக்கு இப்போது மாறிவிட்டனர்,” என்கிறார் பாபு யூனுஸ் கிளம்பிச் சென்றுவிட்ட பிறகு.
தோல் பையை சரி செய்ய ஆளின்றி, மன்சூரும் பிளாஸ்டிக் பக்கெட்டுகளுக்கு மாறிவிட்டார். “யூனுஸுக்குப் பிறகு, மஷாக்கை சரி செய்ய யாருமில்லை,” என மன்சூர் உறுதிப்படுத்துகிறார். பக்கெட்டுகளில் நீர் நிரப்பி படிக்கட்டுகள் ஏறுவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மஷாக் பயன்படுத்தும்போது சுலபமாக இருந்தது. தோளைச் சுற்றி அதைப் போட்டுக் கொள்ள முடியும். பெரிய அளவு நீரையும் அது கொள்ள முடியும். “எங்களது பிஷ்டி வேலையின் இறுதி அத்தியாயம் இது,” என யூகிக்கிறார் பாபு. “இதில் பணம் இல்லை. மோட்டார் பைப்புகள் எங்களின் வேலைகளை எடுத்துக் கொண்டு விட்டன.”

புலேஷ்வரின் சிபி டேங்க் பகுதியின் சந்தராம்ஜி மேல்நிலைப் பள்ளியில் மசூர் அவரது நீர் வண்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறார்.
இங்கிருக்கும் கோவில்களும் பள்ளிகளும் பிஷ்டிகளுக்கு நீர் விற்கின்றன

துத் பஜாரின் ஒரு பகுதியில் வண்டியிலிருந்து மன்சூர்
நீரை நிரப்பிக் கொள்கிறார். அது 2020, அப்போதும் அவர் மஷாக்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
ஒரு கார் டயரின் மீது பையை வைத்து, அதன் வாயை நீர் வரும் இடத்தில் நிரம்பும் வரைப்
பிடித்திருப்பார்

மஷாக் தோளில் அணிந்து தொங்கவிடப்படுகிறது. அதன் வாய்
சமநிலைக்காகக் கையால் பிடிக்கப்படுகிறது

புலேஷ்வரின் சிறு நிறுவனங்கள் மஷாக்வாலாக்களிடமிருந்து
நீர் வாங்கின. இங்கு நுல்பஜாரின் ஒரு கடைக்கு மன்சூர் நீர் விநியோகிக்கிறார். அப்பகுதியின்
கட்டுமானத் தளங்களிலிருந்தும் அவருக்கு ஆர்டர்கள் வருகின்றன

நுல்பஜாரின் ஒரு பழைய பாழடைந்த மூன்று மாடி வீட்டின்
மரப் படிக்கட்டுகளில் மன்சூர் ஏறுகிறார். இரண்டாம் மாடியில் இருக்கும் ஒருவருக்கு
60 லிட்டர் நீர் கொடுக்க வேண்டும். அதற்கு அவர் 2-3 முறை மஷாக்குடன் மேலும் கீழும்
ஏறியிறங்க வேண்டும்

நீர் வண்டி தள்ளிச்சென்று நீர் விநியோகிப்பதிலிருந்து
மன்சூரும் அவரது நண்பர் ரசாக்கும் துத் பஜாரில் சிறு ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்

காலையின் கடின உழைப்புக்குப் பிறகு ஒரு சிறு மதியத்
தூக்கம். 2020-ல் மன்சூரின் வீடு துத் பஜாரின் பொதுக் கழிப்பறைக்கு அருகே இருக்கும்
திறந்த வெளியாக இருந்தது. காலை 5 மணியிலிருந்து காலை 11 மணி வரை வேலை பார்ப்பார். பிறகு
மீண்டும் பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 5 மணி வரை, மதிய உணவுக்கும் சிறு தூக்கத்துக்கும்
பிறகு வேலை பார்ப்பார்

பிஷ்டி வணிகத்தில் மன்சூரின் பங்குதாரரான ஆலம், நுல்
பஜாரின் சாலையோரக் கடைக்காரர்களுக்கு நீர் விநியோகிக்கிறார். ஒவ்வொரு 3-6 மாதங்களுக்கும்
ஒருமுறை மன்சூரின் வேலையை ஆலம் எடுத்துக் கொள்வார். மற்றவர் பிகாரிலிருக்கும் குடும்பத்தைப்
பார்க்க சென்று விடுவார்

ஜனவரி 2021-ல் நுல் பஜாரின் ஒரு தொழிலாளிக்கு தன் மஷாக்கில்
நீர் விநியோகிக்கிறார் ஆலம்

பெந்தி பஜாரின் ஆயாஸ் மஸ்ஜித்துக்கு அருகே பாபு நய்யர்
ஒரு கடையின் முன்புறத்தை தன் மஷாக்கின் நீரால் கழுவிக் கொண்டிருக்கிறார். அப்பகுதியின்
பிஷ்டியாக அவர் பணிபுரிகிறார். பல கடைக்காரர்கள் தம் கடைகளின் முற்புறங்களைக் கழுவுவதற்ஆக
பிஷ்டிகளை அழைப்பதுண்டு. பாபு, ஆலம் மற்றும் மன்சூர் ஆகியோர் பிகாரின் கடிஹார் மாவட்டத்திலுள்ள
கச் ரசுல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்

பாபு அவரின் மஷாக்கை யூனுஸ் ஷேக்கிடம் (இடது) ஜனவரி
2021-ல் காண்பிக்கிறார். மஷாக்கில் மூன்று ஓட்டைகள் இருந்தன. அவை சரிசெய்யப்பட வேண்டும்.
யூனுஸ் 120 ரூபாய் கேட்டார். ஆனால் பாபுவால் 50 ரூபாய் மட்டுமே கொடுக்க முடிந்தது

பாபுவின் மஷாக்கை சரிசெய்யும் யூனுஸ் பெந்தி பஜாரின் நவாப் அயாஸ் மஸ்தித்துக்கு அருகே இருக்கும் கட்டிடத்தின் வாசலில் அமர்ந்திருக்கிறார்

சரி செய்தபிறகு ஐந்த அடி நீள மஷாக்கை யூனுஸ் பிடித்துக்
கொண்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அவர்
பஹ்ரைச்சில் இருக்கும் வீட்டுக்கு திரும்பினார். மீண்டும் வரவே இல்லை. மும்பையில் அவரது
வருமானம் குறைந்து விட்டதாகக் கூறினார். மஷாக்கை தைப்பதற்கான சக்தியும் அவரிடத்தில்
இல்லை

வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோகிக்க பாபு பிளாஸ்டிக்
கேன்களை பயன்படுத்துகிறார்

யூனுஸ் சென்றபிறகு மன்சூரும் பிளாஸ்டிக் பக்கெட்டுகளுக்கு
மாறிவிட்டார். ஏனெனில் அவரின் மஷாக்கை சரி பார்க்க யாருமில்லை. இங்கு அவர் ஜனவரி
2022-ல் நுல் பஜாரின் சிறு கடைகளில் பகலில் வேலை பார்த்துக் கொண்டு இரவில் தெருக்களில்
தூங்கும் தொழிலாளர்களுக்கு நீரைச் சுமந்து சென்றார்

நீரைக் கொடுத்துவிட்டு, பக்கெட்டுகளில் மீண்டும் நீர் நிரப்ப நீர் வண்டிக்கு திரும்பும் மன்சூர்

பிஷ்டிகள் செய்து கொண்டிருந்த வேலையை நீர் தாங்கிகள்
எடுத்துக் கொண்டு விட்டன. மின்சார மோட்டாரின் உதவியோடு நேரடியாகக் குடியிருப்புகளுக்கு
நீர் விநியோகிக்கப்படுகிறது

நுல் பஜாரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்
ட்ரம்கள். இவை பிஷ்டிகள் மத்தியில் பிரபலமாகி இருக்கின்றன. நீர் வண்டிகளுக்கு பதிலாக
இந்த ட்ரம்களை பிஷ்டிகள் பயன்படுத்துகின்றனர்

நுல் பஜாரில் நீர் வி நியோகித்த பிறகு மஷாக்குடன் இருக்கும்
மன்சூர் ஆலம் ஷேக்கின் பழைய புகைப்படம். ‘மஷாக்கில் நீர் சுமந்து செல்லும் பாரம்பரியம்
இப்போது செத்து விட்டது’
தமிழில் : ராஜசங்கீதன்