மனிதனின் பாலினத்தை க்ரோமோசோம்கள் எப்படி தீர்மானிக்கிறது என உயிரியல் ஆசிரியர் பாடம் நடத்துகையில் வகுப்பறையே அமைதியாகக் கவனிக்கிறது. “பெண்களுக்கு இரண்டு எக்ஸ் க்ரோமோசோம்களும் ஆண்களுக்கு ஒரு எக்ஸ் ஒரு ஒய் க்ரோமோசோமும் இருக்கின்றன. எக்ஸ் எக்ஸ் க்ரோமோசோம்கள் ஒய் க்ரோமோசோமுடன் சேர்கையில், அங்கு அமர்ந்திருப்பவர் போல ஒருவர் கிடைப்பார்,” என ஒரு மாணவரை சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். மாணவர் சங்கடத்துடன் எழுந்து நிற்க வகுப்பறை சிரிப்பில் மூழ்குகிறது.
சண்டக்காரங்க நாடகத்தின் ஆரம்பக் காட்சி இது. சண்டக்காரங்க, திருநர் சமூகம் பற்றிய நாடகம். நாடகத்தின் முதல் பாதி, பாலினம் பணிக்கும் பங்கை அளிக்காத குழந்தைக்கு வகுப்பறையில் ஏற்படுத்தப்படும் கிண்டலும் அவமானமும் பற்றி பேசுகிறது. இரண்டாம் பகுதி, வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்ட திருநங்கையர் மற்றும் திருநம்பியர் வாழ்க்கைகளை மீட்டுருவாக்கியது.
ட்ரான்ஸ் ரைட்ஸ் நவ் கலக்டிவ் (TRNC) என்கிற திருநர் உரிமைகள் அமைப்பு, இந்தியாவின் தலித், பகுஜன் மற்றும் பழங்குடி சமூகங்களிலிருந்து வரும் திருநரின் குரல்களை நோக்கி இயங்குகிறது. சண்டக்காரங்க நாடகத்தின் முதல் அரங்கேற்றத்தை அவர்கள் சென்னையின் நவம்பர் 23, 2022 அன்று நிகழ்த்தினார்கள். ஒரு மணி நேர நாடகம் ஒன்பது பேர் கொண்ட திருநர் குழுவால் இயக்கி, தயாரித்து, நடிக்கப்படுகிறது.
“நவம்பர் 20ம் தேதி சர்வதேச திருநர் நினைவேந்தல் நாளாக இறந்து போன திருநர்களை நினைவுகூர அனுசரிக்கப்படுகிறது. குடும்பங்களால் ஒதுக்கப்பட்டு சமூகத்தால் விலக்கப்படும் அவர்களின் வாழ்க்கைகள் அத்தனை சுலபமானவை அல்ல. பலர் கொல்லப்படுகின்றனர். பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்,” என்கிறார் TRNC-ன் நிறுவனர் கிரேஸ் பானு.

சண்டக்காரங்க நாடக ஒத்திகையில் கலைஞர்கள்

க்ரோமோசோம்களை பற்றியும் திருநர் சமூகத்தின் பாலின அடையாளம் குறித்தும் விளக்கும் ஆசிரியராக கிரேஸ் பானு நடிக்கிறார்
“ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருநர் சமூகத்துக்கு எதிரான வன்முறை நேரும்போது, யாரும் குரல் எழுப்புவதில்லை. சமூகத்தில் நிசப்தம் நிலவும்,” என்கிறார் கலைஞரும் செயற்பாட்டாளருமான பானு. “உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் சண்டக்காரங்க எனப் பெயர் சூட்டியிருக்கிறோம்.”
2017ம் ஆண்டில் இந்த நாடகம் ‘சண்டக்காரி’ என்கிற பெயரில் மேடையேற்றப்பட்டது. 2022ம் ஆண்டில் ‘சண்டக்காரங்க’ எனப் பெயர் மாற்றப்பட்டது. “திருநர் சமூகத்தை சேர்ந்த அனைவரையும் உள்ளடக்க வேண்டுமெனப் பெயரை மாற்றினோம்,” என்கிறார் கிரேஸ் பானு. இந்த நாடகத்தில் இருக்கும் ஒன்பது கலைஞர்களும் வலியையும் துன்பத்தையும் பேசுகின்றனர். திருநர் சமூகம் மீதான வன்முறை மற்றும் வார்த்தைப் பிரயோகங்கள் குறித்து நிலவும் அமைதியையும் அறியாமையையும் கேள்வி கேட்கின்றனர். “திருநங்கையரும் திருநம்பியரும் ஒன்றாக மேடையேறியது இதுவே முதன்முறை,” என்கிறார் சண்டக்காரங்க நாடகத்தின் கதாசிரியரும் இயக்குநருமான நேகா.
“பிழைப்பை நோக்கிதான் நாங்கள் எப்போதும் ஓடுகிறோம். மாதாந்திர செலவுகளுக்கும் அத்தியாவசியங்களுக்கும் தொடர்ந்து நாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நாடகத்துக்கு எழுதும்போது நான் உற்சாகத்தில் இருந்தேன். அதே நேரத்தில் திருநங்கையரும் திருநம்பியரும் நாடகங்களில் நடிக்க வாய்ப்பற்றிருப்பதும் கோபத்தை கொடுத்தது. வாழ்வதற்கு எத்தகைய ஆபத்தையும் சந்திக்க தயாராக இருக்கிறோம், ஒரு நாடகத்தை தயாரிக்க ஏன் அதே தைரியத்தை கொள்ளக் கூடாது என நினைத்தேன்,” என்கிறார் நேகா.
இந்த புகைப்படக் கட்டுரை, திருநர் சமூகத்தின் அழிக்கப்பட்ட பல வரலாற்றுத் தருணங்களை மீட்டுருவாக்கி, அவர்களின் உடல் மீதான மதிப்பையும் வாழ்வதற்கான உரிமையையும் மீண்டும் கோருகிறது.


சண்டக்காரங்க நாடக இயக்குநரும் நடிகருமான நேகா (இடது) மற்றும் திருநர் உரிமை செயற்பாட்டாளர் கிரேஸ் பானு (வலது)


இடது: ரேணுகா ஜெ. ட்ரான்ஸ் ரைட்ஸ் நவ் கலக்டிவின் பண்பாட்டு ஒருங்கிணைப்பாளரும் நாடகக் கலைஞரும் ஆவார். வலது: பிரஸ்ஸி டி. ஒரு நாடகக் கலைஞர். காஸ்ட்யூம் டிசைன் மற்றும் ஃபேஷன் முதுகலை படிக்கிறார்


ரிஸ்வான் எஸ் (இடது) மற்றும் அருண் கார்த்திக் (வலது) ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். நாடகக் கலைஞர்களாகவும் இருக்கின்றனர். ‘சமூகத்தில் திருநம்பியர் சிறுபான்மையினர். புலப்படுவதே இல்லை. இந்த நாடகம் திருநம்பியர் பற்றிய கதைகளையும் சொல்கிறது,’ என்கிறார் அருண்


’இந்த நாடகம் பலரை சென்றடைந்து திருநர் மக்களுக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளிக்குமென நம்புகிறேன்,’ என்கிறார் பொறியியல் மாணவரும் நாடகக் கலைஞரும் ட்ரான்ஸ் ரைட்ஸ் நவ் கலக்டிவின் மாணவ ஒருங்கிணைப்பாளருமான அஜிதா ஒய். (இடது) நாடகக் கலைஞர் ராகினி ராஜேஷின் புகைப்படம் (வலது)


இடது: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நாடகக் கலைஞரான நிஷாதனா ஜான்சன். “இந்த நாடகம் திருநர் மக்களின் வலி மற்றும் துயரம் பற்றிய வெளிச்சத்தை கொடுப்பது மட்டுமின்றி, அவர்களது உரிமைகளுக்காக போராடி உயிரிழந்தவர்களின் வாழ்க்கைகளையும் காட்டுகிறது.’ வலது: நாடகத்துக்கான ஒத்திகையில் கலைஞர்கள்


நாடகத்தில் இடது: நிஷாதனா ஜான்சன் மற்றும் அஜிதா ஒய். வலது: பிரஸ்ஸி டி. தங்களின் ஒப்பனையை போட்டுக் கொள்கின்றனர்

கல்வி நிறுவனங்களில் திருநர் சமூகம் அனுபவிக்கும் வன்முறைகளை சண்டக்காரங்க காட்டுகிறது

வீட்டில் ஒரு திருநங்கை எப்படி நடத்தப்படுகிறார் எனக் காட்டும் காட்சி

மாற்றத்துக்கான சிகிச்சையால் ஏற்பட்ட பால்யகால கொடும் அனுபவங்கள் மற்றும் பாலினம் வேண்டும் பங்கை நிறைவேற்றாததால் ஏற்படுத்தப்பட்ட அவமானம் மற்றும் வன்முறை ஆகியவற்றை நாடகத்தில் வெளிப்படுத்தும் ஒரு காட்சி

சென்னையில் நாடக ஒத்திகையில் கலைஞர்கள்

திருநர் சமூகம் அனுபவிக்கும் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை குறித்து வெகுஜன சமூகம் கொண்டிருக்கும் மவுனத்தை நாடகத்தில் நேகா கேள்விக்குட்படுத்துகிறார்

பிரஸ்ஸி டி. பாலினம் உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒரு திருநர் அனுபவிக்கும் வலி மற்றும் துயரம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறார்

ரிஸ்வான் எஸ்., எதிர்பாலின ஈர்ப்பு மட்டுமே இயல்பென நம்பும் இச்சமூகத்தில் வாழும் திருநம்பியின் காதல், புறக்கணிப்பு மற்றும் வலி ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்

காவலர்களால் பாலியல் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட திருநங்கையாக கிரேஸ் பானு நடித்திருக்கிறார்

திருநர் மக்களின் உடல்களை மதிக்குமாறும் உடல்ரீதியான அவமதிப்புகளையும் திருநர் மீதான வெறுப்பையும் திருநர் மீதான வன்முறையையும் முடிவுக்கு கொண்டு வருமாறு பார்வையாளர்களை நேகா (நிற்பவர்) கேட்கிறார்

துயரங்களுக்கும் வலிக்கும் மத்தியில்கூட எப்படி சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் வாழ்க்கையில் கொண்டிருக்கிறார்கள் என்பதை கலைஞர்கள் வெளிப்படுத்துகின்றனர்

திருநர் சமூகத்தின் மறக்கப்பட்ட வரலாற்றை சண்டக்காரங்க நாடகத்தின் மூலம் நவம்பர் 2022 அன்று மேடைக்கேற்றிய நாடகக் கலைஞர்களின் குழு

தொடக்க நாளில் நாடகம் முடிந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கின்றனர்
தமிழில் : ராஜசங்கீதன்